இயேசுவுக்கு நேர்ந்ததென்ன...வரலாறு - 2
பரங்கிப்பேட்டை ஜி.நிஜாமுத்தீன்
இயேசுவின் வாழ்க்கையை முழுமையாக தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் அவர் எந்த சமுகத்திற்கு வந்தாரோ அந்த சமுகம் பற்றி ஓரளவு தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அந்த சமுகம் யார் என்பதையும் முதல் தொடரில் ஓரளவு கண்டோம்.
இயல்பாக அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் பொய்பிக்கப்பட்டு பலர் கொலையும் செய்யப்பட்டதால் கடின சித்தம் படைத்த யூதர்களை நல்வழி படுத்த இயல்புக்கு மாற்றமாக ஒரு அத்தாட்சி மிக்க இறைத்தூதரை அனுப்புவோம் என்ற இறைவனின் ஏற்பாட்டாலும், தன் வயிற்றிலும் சந்ததியிலும் சிறந்த குழந்தை உருவாக வேண்டும் என்ற இயேசுவின் தாய் வழி பாட்டியார் செய்த பிரார்த்தனையாலும் இயேசுவை இறைவன் தேர்ந்தெடுக்கிறான்.
(இயேசுவாகிய) அவர் (நம்முடைய) அடியாரேயன்றி வேறில்லை. அவர்மீது நாம் அருள் புரிந்து இஸ்ராயீலின் மக்களுக்கு அவரை ஓர் உதாரணமாக்கினோம் (அல் குர்ஆன் 43:59) என்ற வசனம் பிரத்யேகமாக யூதர்களுக்கு இறைவன் வழங்கிய அத்தாட்சியை - நமது இரண்டாவது கூற்றை - மெய்ப்பிக்கிறது.
இனி வரலாற்றுக்குப் போவோம்.
நிச்சயமாக இறைவன் ஆதாமையும், நோவாவையும், ஆப்ரஹாமின் சந்ததியினரையும், இம்ரானுடைய குடும்பத்தினரையும் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்துள்ளான். (அல் குர்ஆன் 3:33)அவர்களில் அனைவரும் முந்தியவர்களின் சந்ததியினர்தான். (அல் குர்ஆன் 3:34) 3:33 வது வசனத்தில் ஆதாம், நோவா, இப்ராஹிமுடைய சந்ததி என்றெல்லாம் இறைவன் குறிப்பிடுவதை நாம் அறிவோம். அதன் தொடர்ச்சியாக 'இம்ரானின் குடும்பத்தினர்' என்று இறைவன் கூறுகிறான். இந்த இம்ரான் குடும்பத்தில் ஒருவராகத்தான் இயேசு அவர்கள் பிறக்கிறார்கள். இயேசுவின் தாய் வழி பாட்டி - மரியாளின் தாய் - செய்த பிரார்த்தனை இயேசுவின் வருகைக்கு ஒரு முன்னுரையாக அமைந்தது.
மரியாளின் தாயார் கர்ப்பம் தரித்திருந்த போது ''இறைவா என் வயிற்றில் உள்ள குழந்தையை உனக்காக நேர்ந்து விட்டேன். அது முழுமையாக உனக்காக அர்ப்பணிக்கப்படும். இதை என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக. நீயே செவியுறுபவனாகவும் அறிந்தவனாகவும் இருக்கிறாய்'' என்று இம்ரானின் மனைவி பிரார்த்தித்தார். (அல் குர்ஆன் 3:35)
அவர் குழந்தையை ஈன்றெடுத்த போது 'இறைவா.. நான் பெண்குழந்தையைப் பெற்று விட்டேனே..' என்றார். அவர் எத்தகையதை ஈன்றெடுத்தார் என்பதை இறைவன் நன்கறிவான். 'ஆண் பெண்ணைப் போன்றவனல்ல. நான் இவளுக்கு மரியம் (மரியாள்) என்று பெயரிட்டுள்ளேன். சபித்து துரத்தப்பட்ட (தீய சக்தியான) ஷைத்தானை விட்டு இவளுக்கும் இவளின் வழிதோன்றல்களுக்கும் உன் பாதுகாப்பை வேண்டுகிறேன்' என்று அவர் (மரியாளின் தாயார்) கூறினார் (அல் குர்ஆன் 3:36)
இஸ்ரவேலர்களில் விதிவிலக்காக இறைவனை நம்பி - அவனுக்கு எதையும் இணையாக்காமல் கட்டுபட்டு நடக்கும் ஒரு நல்ல பெண்ணாக மரியாளின் தாயார் வாழ்ந்துள்ளார் என்பதை இந்த வசனங்களின் மூலம் விளங்கலாம். இவர் வாழ்ந்த காலகட்டத்தில் அந்த சமூகத்தின் மனப்பான்மை எப்படி இருந்ததது என்பதை 2:87 வசனத்தின் மூலம் முதல் தொடரில் அறிந்தோம்.
இறைத்தூதர்கள் பொய்பிக்கப்பட்டு சிலர் கொலை செய்யப்பட்ட மட்டமான - மோசமான சூழ்நிலை நிலவி வருவதை மரியாளின் தாயார் கண்டு அனுபவிக்கிறார்கள். இந்த கொடுமையை எதிர்க்க தன் புறத்திலிருந்து ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கூட அவர்கள் இப்படி ஒரு பிரார்த்தனையை செய்ய தூண்டி இருக்கலாம். இங்கு தொடரும் அவலங்கள் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வராது என்பதை உணர்ந்தும், தான் ஒரு பெண் என்பதால் தன்னால் களத்தில் நின்று இந்த கொடுமையாளர்களை எதிர்க்க முடியாது என்பதாலும் தன் வயிற்றில் வளரும் குழந்தை பிறந்து வளர்ந்து இறை வழியில் தன்னை அர்ப்பணித்து இவர்களுக்கு பாடம் புகட்டட்டும் என்ற சிந்தனையாளும் அவர்கள் இந்த பிரார்த்தனையை வைத்திருக்கலாம்.
'என் வயிற்றில் உள்ளதை உனக்காக அர்ப்பணிக்கிறேன்' என்ற கூற்றை சிந்திக்கும் போது நாம் எழுதியவாறு உள்ள எண்ண ஓட்டங்கள் அந்த தாயின் மனதில் எழுந்திருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது. அவர் ஒரு குழந்தையை பெற்றெடுக்கிறார் அது பெண் குழந்தையாகி விடுகிறது. அவர் எதிர்பார்த்த ஆண் குழந்தை கிடைக்கவில்லை. தன் எண்ணம் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற கவலையில் தான் 'நான் ஒரு பெண் குழந்தையை பெற்று விட்டேனே..' என்கிறார். ஆண் பெண்ணைப் போன்றவனல்ல.. என்ற அந்த தாயின் கூற்றும் 'இறைவனுக்காக தன்னை அர்ப்பணித்து போராட்ட களம் காணும் தகுதி ஆணுக்கு தான் இருக்க முடியும் ஆனால் பிறந்தது பெண்ணாகி விட்டதே..' என்ற கவலையின் சாயலில் தான் வெளிப்படுகிறது. இருந்தும் அவர் தன் நம்பிக்கையை தளர்த்திக் கொள்ளாமல் குழந்தைக்கு மரியம் (மரியாள்) என்று பெயரிட்டு அதை இறைவனின் பாதுகாப்பில் ஒப்படைக்கிறார்கள்.
அவரை (மரியாளை) இறைவன் அழகிய முறையில் எடுத்துக் கொண்டான். அவரை அழகிய முறையில் வளர்த்தான். அவருக்கு ஜகரிய்யாவை பொறுப்பாளியாக்கினான். (அல் குர்ஆன் 3:37)
(உள்ளத் தூய்மையோடும் உயர்ந்த நோக்கத்திற்காகவும் இறைவனிடம் செய்யும் முறையீடுகள் (பிரார்த்தனைகள்) எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று முஸ்லிம்களுக்கு இதில் படிப்பனையுள்ளது.) பைபிளின் புதிய ஏற்பாட்டின் நான்கு சுவிசேஷ காரர்களான மாற்கு, மத்தேயு, லூக்கா, யோவான் இவர்களில் யாரும் குர்ஆனில் வரும் மரியாளின் தாயார் பற்றிய சம்பவங்களை குறிப்பிடவே இல்லை.
ஜகரிய்யா பொறுப்புதாரியாக்கப்பட்டார் என்பதிலிருந்து மரியாளின் தாயார் மரியாளை பெற்றவுடன் மரணித்து இருக்கக் கூடும் என்பதை யூகிக்கலாம். ஜகரிய்யா அவர்களிடம் வளரும் மரியாளுக்கு அவ்வப்போது சிற்சில அற்புதங்கள் நிகழ்கின்றன.
மரியாள் தங்கிக் கொள்ளும் அறைக்கு ஜகரிய்யா அவர்கள் செல்லும் போதெல்லாம் மரியாளிடம் இருக்கும் உணவு வகைகளை கண்டு 'மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது? என்று கேட்கிறார்கள். அதற்கு மரியாள் இது இறைவன் கொடுக்கிறான். அவன் தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான் என்கிறார்கள். (அல் குர்ஆன் 3:38)
இறைவனிடமிருந்து மரியாள் பெற்ற அறிவிப்பு.
மரியமே! இறைவன் உம்மை தேர்வு செய்து தூய்மையாக்கி அகிலத்தின் பெண்களை விட உன்னை சிறப்பித்துள்ளான் என்று வானவர்கள் நற்செய்திக் கூறுகிறார்கள். (அல் குர்ஆன் 3:42)
மரியமே! உனது இறைவனுக்கு பணிந்து நடப்பாயாக, அவனுக்காக தலை தாழ்த்தி வணங்குவாயாக. குனிந்து வணங்குவோருடன் குனிந்தும் வணங்குவாயாக என்றும் வானவர்கள் கூறினார்கள். (அல் குர்ஆன் 3:43)
இவை மறைவனா செய்திகளாகும். (முஹம்மதே.. இறைவனாகிய) நாமே இதை உமக்கு அறிவிக்கிறோம். மர்யமை யார் பொறுப்பேற்றுக் கொள்வது என்று முடிவு செய்ய அவர்கள் எழுதுகோல்களைப் போட்ட போதும், இது குறித்து அவர்கள் சர்ச்சை செய்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (அல் குர்ஆன் 3:44)
மரியாளை இறைவன் அகிலத்தின் பெண்களை விட தூய்மைப்படுத்தியதாகவும், அவரை இறைவன் தேர்ந்தெடுத்துக் கொண்டதாகவும் இந்த வசனங்களில் கூறப்படுகின்றன. கிறிஸ்துவ பிரச்சாரர்களால் இந்த வசனங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டு வருவதை நாம் பார்க்கிறோம். தேர்ந்தெடுத்து தூய்மைப்டுத்துதல் என்பதை 'தூய்மைப்படுத்தி மனைவியாக தேர்ந்தெடுத்துக் கொண்டான்' என்று வளித்து பொருள் கொண்டு - இறையச்சமின்றியும் பகுத்தறிவு சிந்தனையின்றியும் - விஷமத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இறைவன் என்பவன் தனித்தவன், பெறப்படாதவன், யாரையும் பெற்று தாயாகவோ தந்தையாகவோ ஆகாதவன், எத்தகைய தேவையும் அற்றவன், அவனுக்கு நிகராக எதுவுமில்லாதவன் என்றெல்லாம் இஸ்லாம் இறைவனுக்கு இருக்க வேண்டிய தனித்தகுதிகளை - இறைவனைத் தவிர பிறருக்கு இருக்கவே முடியாத தகுதிகளை - உலகில் முழங்கி அந்த சத்தியத்தின் பக்கம் மக்களை ஈர்த்து வளர்ந்துக் கொண்டு வருவதை அறியாதவர்களல்ல இவர்கள். இருப்பினும் இவர்களின் 'திரித்துவ' கொள்கையை மக்களிடம் - குறிப்பாக முஸ்லிம்களிடம் - திணிக்க திரித்தல் கலையை கையாண்டு வருகிறார்கள்.
தூய்மைப்படுத்துதல் - தேர்ந்தெடுத்தல் என்பதன் பொருள் என்ன?மனைவியாக வருபவளை மட்டும் தான் தூய்மைபடுத்த முடியும். தேர்ந்தெடுக்க முடியும் என்பதுதான் கிறிஸ்துவ உலகின் அளவுகோலா...கிறிஸ்துவத்தை பிரச்சாரம் செய்வதற்காகவே உருவாக்கப்படும் கன்னியாஸ்திரிகள் எப்படிப்பட்டவர்கள்? மத குருக்களால் தேர்ந்தெடுத்து தூய்மைப்படுத்தப்படுபவர்களே கன்னியாஸ்திரிகள் என்ற தகுதியை அடைய முடியும். இப்படி தெர்ந்தெடுக்கப்பட்டவர்களெல்லாம் கர்த்தருக்கு மனைவியாகத்தான் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள் என்று கூறி கிறிஸ்துவ உலகம் கர்த்ததை காமம் நிறைந்தவராகவும் பெண் மோகம் உள்ளவராகவும் சித்தரிக்குமா... அப்படியெல்லாம் இல்லையென்றால், மரியாளுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா... இன்றைய கன்னியாஸ்திரிகள் கர்த்தர் வழியில் தன்னை அர்ப்பணித்து அவருக்கு ஊழியம் செய்யவே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்தப் பணிக்கு உள்ளத்தூய்மையும் கட்டுப்பாடும் முக்கியம் என்பதால் அதற்கான பயிற்சியின் மூலம் அவர்கள் தூய்மைப்படுத்தப்படுகிறார்கள் என்று கிறிஸ்துவம் பதில் சொன்னால் இந்த வாதம் மரியாளின் விஷயத்தில் மட்டும் பொருந்தாமல் போய்விடுமா...
உலக அளவில் கிறிஸ்தவர்களால் நடத்தப்படும் கல்விக் கூடங்கள் இன்னபிற நிறுவனங்கள் இங்கெல்லாம் ஏனோ தானோவென்று ஆட்களை நியமிக்கிறார்களா... அல்லது தகுதிப்படைத்தவர்களை தேர்ந்தெடுத்து நியமிக்கிறார்களா... இங்கெல்லாம் நல்ல ஆண்களை தெர்ந்தெடுக்கும் போது அது அங்குள்ள பெண்களுக்கு கணவர்கள் என்ற அடிப்படையில்தான் என்றும், சிறந்தப் பெண்களை தேர்ந்தெடுக்கும் போது இது அங்குள்ள ஆண்களுக்கான மனைவிகளின் தேர்வுதான் என்றும் பிறர் விளக்கம் சொன்னால் இவர்களால் பொருத்துக் கொள்ள முடியுமா...
தேர்ந்தெடுத்தலும் - தூய்மைப்படுத்துதலும் மனைவியாக்கத்தான் என்பது எவ்வளவு கீழ்தரமான வாதம் என்பதை கிறிஸ்துவ சகோதரர்கள் இப்போது உணர்வார்கள் என்று நம்புகிறோம். கர்த்தர் மரியாளை தேர்ந்தெடுத்து தூய்மைப்படுத்துகிறார் என்பது உண்மைதான். இறைவனுக்கு மனைவி என்ற மட்டரகமான தகுதிக்காக இந்த தேர்வு நடக்கவில்லை. இந்த தேர்வு மரியாளின் தாயார் செய்த பிரார்த்தனைக்காக நடந்ததாகும். யூதர்களின் கொடுமையை கண்டு அதை எதிர்க்க தன் பங்களிப்பாக தன் வயிற்றில் வளர்வதை இறைவனுக்கு அர்ப்பணிக்க முடி செய்து அதை கர்த்தரிடம் அறிவிக்கவும் செய்கிறார். ஆனால் கர்த்தர் கொடுத்ததோ பெண் குழந்தை. 'நான் ஒரு பெண்ணை பெற்றுவிட்டேனே...' என்று அவர் மனம் நொந்துப்போனாலும் கர்த்தரின் திட்டம் வேறு விதமாக இருந்தது. ஆண் பெண்ணைப் போன்றவனல்ல என்று அந்த தாய் நினைத்தாலும் பெண்ணாலும் இறைவழியில் பெரும் தியாகம் செய்ய முடியும் என்பதை உலகிற்கு உணர்த்துவதற்காக மரியாளை தேர்ந்தெடுப்பது இறைவனின் திட்டமாக இருந்தது. கர்த்தருக்கான அர்ப்பணத்திற்கு ஒரு முன்னுதாரனமாகத்தான் அந்த பெண் தேர்ந்தெடுக்கப்படுகிறாரே தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை. மரியாளின் தாயார் செய்த பிரார்த்தனைக்கு களம் அமைக்கும் விதமாகவே அவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். தாயாரின் மறைவுக்கு பிறகு அவரை வளர்ப்பது யார் என்ற பிரச்சனையும் அவர் குறித்த சர்ச்சையும் கிளம்பியதாக இறைவன் 3:44 வசனத்தில் குறிப்பிடுகிறான். இதிலிருந்து அவர் தனித்துவம் வாய்ந்த பெண்ணாக வளர்ந்துள்ளார் என்பதை விளங்கலாம்.
பிற்காலத்தில் இறைவனால் ஏற்படப்போகும் ஒரு மகத்தான சோதனைக்கு அவரை மனோவியல் ரீதியில் தயார் படுத்துவதற்காக அவரை வளர்க்கும் பொறுப்பை இறைவன் இறைத்தூதர் ஜகரிய்யா அவர்களிடம் ஒப்படைக்கிறான். மரியாளை பொறுப்பேற்று வளர்க்கும் போது ஜகரிய்யா அவர்களுக்கு குழந்தை இல்லை. வயதானாலும் குழந்தைக்காக ஏங்கும் இதயம் மட்டும் அவர்களுக்கு ஓயவில்லை. மரியளை குழந்தைக்கு குழந்தையாக வளர்த்து வணக்க வழிபாட்டின் மூலம் அவர்களை பக்குவப்படுத்திக் கொண்டிக்கும் வேளையில் தான் மரியாளுக்கு இறைவன் புறத்திலிருந்து உணவுகள் வழங்கப்படுவதை ஜகரிய்யா அவர்கள் பார்க்கிறார்கள். இது எப்படி உனக்கு கிடைத்தது? என்ற கேள்விக்கு கணக்கின்றி கொடுக்கும் ஆற்றல் உள்ள இறைவன் தான் இதை எனக்கு கொடுக்கிறான் என்று மரியாளிடமிருந்து பதில் வருகிறது. எதற்கும் ஆற்றல் உள்ள இறைவன் தனக்கு ஏன் ஒரு வாரிசை - மகனை கொடுக்க மாட்டான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில், 'இறைவா உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையை கொடுத்தருள்' என்று பிரார்த்திக்கிறார்கள். இறைவன் அதை ஒப்புக் கொள்கிறான். இறைவன் ஒப்புக் கொண்டாலும் ஜகரிய்யா அவர்களால் இதை நம்ப முடியவில்லை ஏனெனில் அவர் தள்ளாத முதுமையை அடைந்து விட்டார்கள். அவர்களின் மனைவியும் குழந்தைப்பேறைப் பெரும் மாதவிடாய் தகுதிகளையெல்லாம் இழந்து மலடு தட்டி விடுகிறார்கள். குழந்தை உருவாவதற்கான இயற்கை விதிகள் கடந்து போயிருந்தாலும் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கின்றது. யஹ்யா என்ற மகனை 'இறைத்தூதரை' ப் பெற்று எடுக்கிறார்கள். இந்த விபரங்கள் அனைத்தும் 3:38 - 39 - 40 வசனங்களிலும் மரியாள்(மரியம்) என்ற 19வது அத்தியாயத்தின் ஆரம்ப ஆறு வசனங்களிலும் கிடைக்கின்றன.
மரியாளை மனோரீதியாக உருவாக்க வேண்டிய நிலையில் ஜகரிய்யா அவர்களின் வழியாக இறைவன் அந்த பாடத்தை போதிக்கிறான்.
தொடரும்
No comments:
Post a Comment