Jul 1, 2007

இயேசு வரலாறு - 5

பைபிளில் சொல்லப்படாத குழந்தை அற்புதம் - 5

பரங்கிப்பேட்டை ஜி. நிஜாமுத்தீன்

இதுவரை வந்த நான்குத் தொடர்களில் இயேசுவின் தாயார் மரியாள் எந்த ஆணும் தீண்டாத நிலையில் கர்ப்பம் தரிக்க தயாராக வேண்டிய அவசியத்தையும், மன ரீதியாக அவரை இறைவன் தயார் படுத்திய விபரத்தையும் கண்டோம். இனி பைபிள் கண்டுக் கொள்ளாத குர்ஆன் மிக அற்புதமாக சொல்லக் கூடிய இயேசுவின் பால்ய நிலையைக் காண்போம்.
பிறந்த குழந்தை தன் தாயின் களங்கத்தை துடைத்தெறியும் விதமாகவும், தன்னைப் பெற்றெடுத்தத் தாய் எத்துனை புனிதமானவள் என்பதையும் காலாகாலத்திற்கும் மக்கள் விளங்கும் விதத்தில் அற்புதம் செய்தது. ஆனால் இதைப் பற்றி பைபில் கண்டுக் கொள்ளவே இல்லை. ஏன் இந்த வித்தியாசம்? அதை அறிவோம்.
பைபிளில்.
18 இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியால் கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.
19. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.
20. அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.
21. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.
22. தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
23. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.
24. யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு;
25. அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான் (மத்தேயு அதிகாரம் 1)

4. அப்பொழுது யோசேப்பும் தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி,
5. கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப்போனான்.
6. அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது.
7. அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். (லூக்கா அதிகாரம் 2)

இயேசுவின் பிறப்புப் பற்றி அதாவது மரியாள் கர்ப்பம் தரித்து குழந்தைப் பெற்றெடுத்த பொழுதுவரை உள்ள விபரங்களை மத்தேயும் - லூக்காவும் மேற்கண்டவாறு சொல்லியுள்ளார்கள்.

பரிசுத்த ஆவியால் மரியாள் கர்ப்பம் தரித்தாள் என்பதில் சுவிஷேசம் எழுதியவர்களுக்கு மத்தியில் ஒத்த கருத்து உள்ளது. இனி குர்ஆன் இதுபற்றி என்ன சொல்கிறது என்பதை பார்த்து விட்டு வருவோம்.

குர்ஆனில்.
வானவர்கள் (மரியாளி)மரியமிடம் கூறினார்கள்: நிச்சயமாக இறைவன் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகன் பிறக்கப்போவது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அவர் பெயர் மஸீஹ், மர்யமின் மகன் ஈஸா (மரியாளின் மகன் இயேசு) என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார். (அல்குர்ஆன் 3:45)

இது மரியமுக்கு (மரியாளுக்கு) சொல்லப்பட்ட சுப செய்தியாகும். இப்படி நடக்க வாய்ப்புள்ளதா.. என்ற சந்தேகம் மரியமுக்கு (மரியாளுக்கு) ஏற்படுகின்றது. அந்த சந்தேகத்தை அவர் வெளிபடுத்தவும் செய்கிறார்.

(மர்யம் இறைவனிடம்) கூறினார்: 'என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?' (அதற்கு) அவன் கூறினான்: 'அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் 'ஆகுக' எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.' (அல் குர்ஆன் 3:47)

இறைவன் இதை மட்டும் சொல்லாமல் மேலும் இரு செய்திகளை சொல்கிறான். ஏற்கனவே ஜகரிய்யா வீட்டில் வளர்ந்த மரியம் அவர்கள் உளவியல் ரீதியாக தயாராகி இருந்ததை முந்தைய தொடர்களில் கண்டோம். அதோடு சேர்த்து இறைவனின் இரு சந்தோஷமான செய்திகளும் மரியமை (மேரியை) அடைகின்றது.

1) உலகப் பெண்களில் அவர் சிறந்தவராக தேர்ந்தெடுக்கப்பட்டது.

மரியமே! உம்மை இறைவன் தேர்வு செய்து தூய்மையாக்கி உலக பெண்கள் அனைவருக்கும் மேலாக உம்மை சிறப்பித்துள்ளான் என்று வானவர் கூறினார். (அல் குர்ஆன் 3:42)

2) குழந்தையால் ஏற்படும் சிறப்பும் பாதுகாப்பும்.

(உமக்கு பிறக்கும் குழந்தையாகிய அவர்) தொட்டில் பருவத்திலும் இளமையிலும் மக்களிடம் பேசுவார். மேலும் நல்லவர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார். (அல் குர்ஆன் 3:46)

இந்த உரையாடல்கள் நடந்தப்பின்பு மரியம் கர்ப்பம் தரிக்கிறார். இறைவனின் வல்லமையை அவரது கர்ப்பப்பை உணர்கின்றது. காலங்கள் நகர்கின்றன. மரியமின் கர்ப்பம் அவர் வளர்ந்த வீட்டில் இருந்தவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை. ஏனெனில் அதே வீட்டில் மாதவிடாயெல்லாம் நின்று போய் கிழட்டுத் தன்மை தட்டி விட்ட ஜகரிய்யாவின் மனைவி (எலிசபத்து)க்கு யஹ்யா என்ற மகன் பிறந்துள்ளார். கணவனும் மனைவியுமாக இருப்பதால் அவர்களின் குழந்தையை அவர்கள் வாழ்ந்த பகுதி மக்கள் சந்தேகக் கண் கொண்டு பார்த்திருக்க மாட்டார்கள். முதிர்ந்த வயதில் குழந்தை பிறந்தாலும் இறைவனின் வல்லமை என்று அந்த மக்கள் விளங்கி இருப்பார்கள்.

ஆனால் மரியமைப் பொருத்தவரை அந்தப் பகுதி மக்களுக்கு இந்த நம்பிக்கை வர வாய்ப்பில்லை. ஏனெனில் அவர் திருமணமாகாத கன்னிப் பெண்ணாக இருக்கிறார். இந்த சந்தர்பத்தில் அவர் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தால் எந்த மனித கண்ணும், மனமும் அதை வேறுவிதமாகத்தான் நோக்கும். அதனால் மர்யம் அவர்கள் கருவளர்ந்தப் பின்பு பேரீத்தப்பழங்களும் நீரோடையும் உள்ள ஒரு தூரமான இடத்தைப் பார்த்து அங்கு சென்று விடுகிறார்கள்.
அந்த இடத்தின் நிகழ்வுகளை குர்ஆன் சொல்கின்றது.

கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார். பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. ''நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?'' என்று அவர் கூறினார். ''கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்'' என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார். ''பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக! அது உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும்'' (என்றார்)நீர், உண்டு பருகி மன நிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் ''நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்'' என்று கூறுவாயாக! (அல் குர்ஆன் 19: 22-26)
இதுவரை
நாம் கண்ட சம்பவங்களில் பெரிய அளவிளான கருத்து வேற்றுமைகள் எதுவும் இல்லை. மரியமுக்கு மனம் முடிப்பதற்காக நிச்சயிக்கப்பட்டிருந்தவரைப் பற்றி குர்ஆன் எங்கும் குறிப்பிடவில்லை.
குழந்தை வழியாக மரியம் மிகப் பெரிய அளவில் சிறப்பிக்கப்படவிருப்பதால் மற்ற சாதாரண விஷயங்களை இறைவன் சொல்லாமல் இருந்திருக்கலாம்.
இனி பைபிள் கண்டுக் கொள்ளாத, குர்ஆனில் மட்டுமுள்ள இயேசுவின் முதல் அற்புதத்தையும் அதனால் மரியாளுக்கு ஏற்பட்ட உலகச் சிறப்பையும் பார்ப்போம்.

பெற்றெடுத்த பிஞ்சுக் குழந்தையுடன் தன் சமூகத்திற்கு மரியம் திரும்பினார். திருமணமாகாத ஒரு கன்னிப் பெண் அதிலும் நல்லக் குடும்பத்தில் பிறந்தப் பெண் கைக்குழந்தையுடன் வருவதைக் கண்ட அந்த பகுதி மக்கள்,
.(பிள்ளையைப் பெற்று) அப்பிள்ளையைத் தமது சமுதாயத்திடம் கொண்டு வந்தார். ''மர்யமே! விபரீதமான ஒரு காரியத்தைச் செய்து விட்டாயே?'' என்று அவர்கள் கேட்டனர். (அல் குர்ஆன் 19:27)
''ஹாரூனின் சகோதரியே! உனது தந்தை கெட்டவராக இருந்ததில்லை. உனது தாயும் நடத்தை கெட்டவராக இருக்கவில்லை'' (என்றனர்)( அல்குர்ஆன் 19:28).
அவர் குழந்தையைச் சுட்டிக் காட்டினார்! ''தொட்டிலில் உள்ள குழந்தையிடம் எவ்வாறு பேசுவோம்?'' என்று அவர்கள் கேட்டார்கள் (அல் குர்ஆன் 19:29).

அந்தப் பகுதி மக்கள் வெளிபடுத்திய வார்த்தைகளிலிருந்து மரியாளின் குடும்பம், அவர் வளர்ந்தக் குடும்பம் எத்துனை கண்ணியமான குடும்பமாக இருந்துள்ளது என்பதை விளங்கலாம். அத்தகைய சிறப்பான குடும்பத்தில் பிறந்த - வளர்ந்த ஒரு கன்னிப் பெண் திருமணம் ஆகாத நிலையில் கையில் குழந்தையுடன் வந்து நிற்கிறார். இப்போது அந்த மக்களின் தூற்றலுக்கும் நக்கல் பேச்சுக்கும், குத்தலுக்கும் யாரால் பதில் சொல்ல முடியும? அந்த சந்தர்பத்தில் 'தான் குற்றமற்றவள்' என்று மரியாள் எத்துனை வலுவாக வாதாடினாலும் அதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல என்றைக்கும் எவரும் அந்த வார்த்தையை பொருட்படுத்தவே மாட்டார்கள். ஏனெனில் உலக நடப்பும் சூழ்நிலையும் அப்படி.

மரியம் தன் நிலையை எவ்வளவு விளக்கினாலும் அதை பிற மனிதர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால் தான் இறைவன் மரியாளை 'நீ பேச வேண்டாம்' என்று சொல்லி விட்டான். அந்த சந்தர்பங்களில் மரியாள் பேசுவது அர்த்தமற்றதாகவே கருதப்படும். 'தவறையும் செய்து விட்டு, குழந்தையையும் பெற்றுக் கொண்டு, எப்படி வீண் விதண்டாவாதம் செய்கிறாள்' என்றுதான் சமுதாயம் தூற்றும். அதனால் அந்த சந்தர்பத்தில் மரியம் வாய் மூடி மெளனமாக இருப்பதே அறிவார்ந்த செயலாகும். இறைவன் மிகத் தெளிவாக இதை மரியாளுக்கு உணர்த்தி விட்டான்.

தான் குற்றமற்றவள் என்பது நிரூபிக்கப்பட வேண்டும். அது தான் பெற்ற குழந்தை அதை உலகிற்கு உணர்த்தும் என்பதை இறைவனின் அறிவிப்பால் உணர்ந்திருந்த மரியாள் அந்த மக்களின் கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக குழந்தையின் பக்கம் செய்கை செய்கிறார். மரியமுக்கு எதிராக குற்றச்சாட்டு வைத்த அந்த மக்களுக்கு ஆச்சரியம். நாங்கள் உன்னிடம் கேள்விக் கேட்டால் நீ குழந்தையை காட்டுகிறாயே.. தொட்டில் குழந்தையிடம் நாம் எவ்வாறு பேசுவோம்? என்று கேட்கிறார்கள். அப்போதுதான் அந்த அற்புதம் நடக்கின்றது.
மரியம் சுமந்து வந்த அந்தக் குழந்தைப் பேசுகின்றது.

நான் கர்த்தரின் அடிமையாக இருக்கிறேன். அவர் எனக்கு வேதத்தைக் கொடுத்து என்னை தூதராகவும் ஆக்கி இருக்கிறார். நான் எங்கிருந்தாலும் என்னைப் பாக்கியம் பொருந்தியவனாக ஆக்கி இருக்கிறார். நான் உயிருடன் இருந்து தாயாருக்கு பணிவிடை செய்யும் காலமெல்லாம் தொழுதுவருமாறும், ஜக்காத் (என்ற பொருளாதார பங்கீடல்) கொடுத்து வருமாறும் ஏவப்பட்டுள்ளேன். நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும், மீண்டும் உயிர் பெற்று எழும் நாளிலும் என்மீது சாந்தி நிலவும் என்று அந்தக் குழந்தைக் கூறிற்று. (அல் குர்ஆன் 19:30,31,32,33)

பச்சிலங்குழந்தையான இயேசு தனது முதல் பேச்சிலேயே ஏராளமான விபரங்களை கூறியுள்ளார். அதை அறியுமுன் பவுலால் தொகுக்கப்பட்டு இயேசுவின் புத்தகம் என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பைபிளில் இவ்வளவு பெரிய அற்புதம் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உலகில் எங்குமே இதுவரையும் நடக்காத ஒரு அற்புதத்தை இயேசுவின் குழந்தைப் பருவம் அதிலும் பிறந்த சில நாட்களில் நடத்துகின்றது. இதை பைபிள் கண்டுக் கொள்ளவில்லை. திருமணமாகத கன்னிப் பெண் குழந்தைப் பெற்றெடுக்கிறாள் என்றால் நிச்சயம் சமூகம் தூற்றவே செய்யும். மரியாளுக்கு ஏற்பட்ட இந்த நிலையை அவர் எப்படி எதிர் கொண்டு தன்னை தூய்மையான பெண் என்பதை மக்கள் முன்னிலையில் நிரூபித்தார் என்ற விபரம் எதுவும் பைபிளில் கிடைக்கவில்லை.

மரியாள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் தரிக்கிறார் என்ற செய்தி சாதாரண ஒன்றல்ல. பைபிளின் வரலாறுபடி மரியாளுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்த யோசேப் என்ற கணவர் திருமணத்திற்கு முன் தனக்கு பேசிவைத்திருந்த பெண் கர்ப்பம் தரிக்கிறாள் என்பதை ஒத்துக்கொள்ள முடியாமல் அவளை தள்ளி விட (திருமணம் செய்யாமல் புறக்கணித்து விட வேண்டும்) என்று மனதிற்குள் எண்ணிய விபரத்தை பைபிள் கூறுகின்றது.

18 மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியால் கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.19. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். (மத்தேயு)

இந்நிலையில் தான் தேவத்தூதர்கள் யோசேபை சந்தித்து மரியாளின் நிலவரத்தைக் கூறுகிறார்கள். யோசேபு பிறகு சமாதானமடைகின்றார். யோசேபின் நிலையே இதுவென்றால் ஊர் மக்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஊர் மக்களைப் பற்றி பைபிள் கண்டுக்கொள்ளவே இல்லை.

இயேசுவின் சிறப்பையும், மரியாளின் கற்பொழுக்கத்தையும் திருக்குர்ஆன் மட்டுமே உலகிற்கு தெளிவாக எடுத்துச் சொல்கின்றது. இயேசு வளர்ந்து பெரியவராக ஆன பின் செய்த பல அற்புதங்களை விட பச்சிலங்குழந்தையாக இருக்கும் போது செய்த அற்புதம் தான் மிகப் பெரியதாகும். வளர்ந்தப்பின் செய்யுமம் அற்புதங்களுக்கு வேறு அர்த்தம் கற்பித்து விடலாம். இயேசுவின் அற்புதம் உட்பட பல இறைத்தூதர்களின் அற்புதங்களுக்கு அந்தந்தப் பகுதி மக்கள் வெவ்வேறு அற்புதம் கற்பித்தார்கள் என்பது பைபிள் உட்பட கூறும் வரலாற்று உண்மையாகும். அதே சமயம் குழந்தை செய்யும் அற்புதத்திற்கு யாரும் வேறு அர்த்தம் கற்பிக்க முடியாது. அது கலப்படமற்ற அற்புதமாகவே உலகிற்கு தெரியும். அப்படிப்பட்ட ஒரு அற்புதம் தான் இயேசுவின் குழந்தைப்பருவத்தில் நிகந்து அவர் அந்தப்பகுதி மக்களிடம் பேசியதாகும். இந்தப் பேச்சு அவரை இறைத்தூதர் என்றும் அவரது தாயார் மரியாள் கற்பு நெறித் தவறாத தூய்மையான பெண் என்றும் உலகிற்கு உணர்த்தியது. இன்றுவரையிலும் உலகின் இறுதிநாள் வரையிலும் அந்த அற்புதம் குர்ஆனில் பேசப்படுகின்றது. இந்த அற்புதத்தை பைபிள் கண்டுக்கொள்ளவில்லை.

இயேசுவின் முதல் பேச்சு குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்தது என்று குர்ஆன் சொல்லும் போது பைபிள் முதல் பேச்சை எப்படி சொல்கின்றது என்பதைப் பாருங்கள்.

அவருக்கு பனிரெண்டு வயதானபோது அவர்கள் அந்த பண்டிகை முறைமையின் படி எருசலேமுக்குப் போய்.......அப்போது அவருடைய தாயார் அவரை நோக்கி மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய் இதோ உன் தகப்பனும் நானும் விசாரத்தோட உன்னைத் தேடினோமே என்றாள். அதற்கு அவர் 'நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள் என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்க வேண்டியதென்று அறியீர்களா என்றார். (லூக்கா 42-49)

பைபிளின் நான்கு சுவிசேசக்காரர்களின் தொகுப்பிலும் இயேசுவின் முதல் பேச்சு இந்த இடத்தில் தான் சொல்லப்பட்டுள்ளது. அதாவது இயேசு தனது பணிரென்டு வயதுக்கு முன் பேசிய எந்த விபரமும் கிடைக்கவில்லை.

பைபிளை மட்டுமே நம்பிக்கொண்டு திருக்குர்ஆன் பற்றிய எந்த சிந்தைனையுமில்லாத கிறிஸ்த்தவ சகோதரர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இயேசுவின் சரியான வரலாறு எங்கு கிடைக்குமென்று.

குழந்தைப் பருவத்தில் இயேசு பேசிய வார்த்தைகள் அதன் ஆழம் அதிலிருந்து வேறுபடும் இன்றைய கிறிஸ்த்துவம் இனி அதுபற்றிப் பார்ப்போம். இறைவன் நாடட்டும்.
தொடரும்

No comments: