Jul 19, 2007

உணரப்படாத தீமை

போதை - உணரப்படாத தீமை
முத்துப்பேட்டை. அபூ ஆப்ஃரி்ன்
நாகரீகம் என்று சொல்லியே பல தீமைகளை நாமே தேடிக்கொள்கிறோம். முக்கியமாக புகைப்பிடித்தல், போதைப்பொருட்கள் உபயோகித்தல் மற்றும் இது போல் உள்ள பல தீமைகளானது, தற்போது நாகரீகம் என்று பறைச்சாற்றிக்கொண்டு பல நாடுகள் இளைய சமுதாயத்தினை சீர்கேட்டு பாதைக்கு தானாகவே இழுத்துச் செல்கிறது.
சிகரெட் என்று, ஒரு நாளைக்கு நபர் ஒருவர் ஆரம்பிப்பார்கள், அடுத்த நாள் அது அவருக்கு குடிப்பழக்கமாக மாறும். அடுத்து அடுத்து வரும் நாள்களோ போதை வஸ்துக்களை உபயோகிப்பதற்கு ஒரு வழியாக அந்த புகையே மாறி போய்விடும் என்றால் மிகையாகாது. அவர்கள் தான் அதனை செய்கிறார்கள் என்று நாம் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டால் நம்மையும் அதற்குப் பழக்கி விட்டு பாழாக்கி விடுவார்கள். இவர்களை போல் உள்ளவர்களிடம் நாம் கொஞ்சம் தூரமாகவும் மற்றும் கவனமாகத்தான் இருக்க வேண்டும். இப்பழக்கம் உள்ளவர்களை திருந்தினால் மட்டும் போதாது, இதனை சமுதாயத்திலிருந்து எப்படி நாம் காப்பாற்ற போகிறோம் என்பதனை ஆய்ந்து அதனை வேரோடு பிடுங்கி ஏறிய வேண்டும்.
புத்தருக்கு போதி மரம் ஞானம் தந்தது போய்
பனை மரத்தடியும் போதை தரும்..
என்று புதுக்கவிதை பாடும் பல இளைஞர்கள் 'கள்ளு' என்ற போதைப்பானத்தினை அருந்த வேண்டி பனைமரத்தினை சுற்றி வருவதை நாம் காணத்தான் செய்கிறோம். மலிவு விலையில் கிடைக்கிறது என்பதற்காக வேண்டி, ஏக இறைவன் தந்த விலை மதிக்க முடியாத உயிரினை விலை மலிவு சரக்குகளை சாப்பிட்டு விட்டு உயிரினை மாய்த்துக்கொள்கிறார்கள். அரசாங்கமே பல சரக்கு கடைகளை அங்காங்கே கொண்டு வந்து விட்டது துணிந்து குடிப்பதற்கு அப்புறம் என்ன கவலை இளைஞர்களுக்கு..?.
கோயில்கள் இல்லாத ஊரில் குடிக்க இருக்க வேண்டாம் என்பார்கள் முதியோர்கள். ஆனால் தற்போது இளைய சமுதாயமோ குடி பார்கள் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என்ற புதிய சிந்தாந்ததுடன் புலம்புகிறார்கள். யார் எப்படி போனால் என்ன நமக்கு.. இன்னைக்கு குடிக்க காசு கிடைக்குமா.. அதனை எப்படி திருடலாம், யார் ஏமாறுவார்கள் என்ற சிந்தனையும் அவர்களிடம் கலந்து விட்டது..
நகரப்பகுதிகளில் கல்வி கற்கின்ற மாணவ, மாணவிகள் ஜோடிகளாக உலாவுவதை நாம் கண் கூடாக காண்கிறோம். கல்லூரி முடிந்து நேராக வீடு நோக்கிச் செல்லாமல் தமது சகாக்களுடன் (அவர்களின் பாஷையில் சொன்னால் மச்சான்.. மாமு..) மதுபானம் மற்றும் போதைவஸ்துக்களை அருந்துவதும் நெறி பிறழ்வை ஏற்படுத்தக்கூடிய வகையிலான திரைப்படங்களைப் பார்ப்பதுடன், புகைத்தல் போன்ற பல்வேறு தீய செயல்களில் ஈடுபடுகின்றனர். இவ்வாறான செயல்பாடுகளை குறைப்பதற்கு ஒரே வழி பெற்றோர்கள் பிள்ளைகளின் இளமைப்பருவம் சம்பந்தமான ஒரு தெளிவான விளக்கத்தை அறிந்திருப்பது தான்.
அதற்காக தீர்க்கமான தீர்வு ஒன்றினை அறியவும் வேண்டும் பெற்றோர்கள்.
நவீன உணவகம் என்ற பெயரில் நடன உணவகமாக மாறி விட்ட பல 'டான்ஸ் பார்' இளை(ய)ஞ சமுதாயத்தினை மிகவும் கவர்ந்து விட்டது. எதிரில் உட்கார்ந்து இருப்பவர்கள் முகம் மட்டும் தான் தெரியும், பக்கத்து மேஜையில் உட்கார்ந்து இருப்பவர்கள் யார் என்றே தெரியாது. (சில நேரங்களில் அங்கு இருப்பவர்கள் அவர்களின் முன்னாள் காதலன் மற்றும் காதலியாக கூட இருக்கலாம்) அப்படியொரு மங்கிப்போன விளக்கொளியில் இன்றைய இளைஞ இளைஞிகள் கூத்தும் மற்றும் கும்மாளமுமாக அரட்டை அடித்துக்கொண்டு, போதைப்பொருட்களை எந்தெந்த வழியில் எல்லாம் பயன் படுத்தலாம் என்ற தனி வகுப்பே நடத்துகிறார்கள்.
ஒரு ஆண் ஒரு அந்நிய பெண்ணுடன் தனியாக இருக்கும் போது மூன்றாவதாக ஷைத்தானும் கூடவே இருக்கிறான் என்பதனை இஸ்லாமிய சமூகத்தினை சார்ந்த நாம் அறிவோம்.
அந்நிய பெண்ணுடன் தனியாக இருப்பது ஹராமானது மற்றும் தடுக்கப்பட்டதாகும் என்பதனை பற்றி குர்ஆன் ஹதீஸ் நமக்கு விளக்குகிறது.
நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள் :'உங்களில் ஒருவர், ஓர் அந்நியப் பெண்ணிடம் (அவளுடன்) அவளுடைய (தந்தை, சகோதரர், மகன் போன்ற) மஹ்ரமான உறவினர்கள் உடன் இருந்தாலன்றி, தனிமையில் தங்க வேண்டாம். ஆதாரம் : முஸ்லிம் - 1629
மாணவ சமுதாயம், கல்லூரி விடுமுறை தினங்களில் ஸ்பெஷல் கிளாஸ் என்று பெற்றோர்களிடம் சொல்லி விட்டு சென்று, தீய செயல்களில் ஈடுபட்டு வருவதோடு, ஜோடிகளாக சினிமா தியேட்டர்களுக்கு செல்வதையும் நாம் காண்கிறோம். பெற்றோர்கள் வியர்வை சிந்தி உழைத்து மிக சிரமத்தின் மத்தியில் தமது பிள்ளைகளை பாட சாலை மற்றும் கல்லூரிக்கு அனுப்பினால், அவர்களின் காசுகள் என்னவோ கல்லுரி கம்பவுண்ட் சுவர்களிலும் மற்றும் சினிமா தியேட்டர் கவுண்டர்களிலும், பாலாபிஷேகமாகவும் மற்றும் கட்அவுட்டாகவும் கரைந்து போய் விடுகிறது. கல்லுரியின் அருகே இருக்கும் பல பெட்டிக் கடைகளில் தின் பண்டங்கள் போல் போதைப் பொருட்களையும் விற்கிறார்கள்.
தனியார் பாடசாலையாக இருந்தாலும் சரி அரசுத்துறை சார்ந்த பாட சாலையாக இருந்தாலும் சரி எந்த கல்லுரியில் அதிகம் போதைப் பொருட்கள் உபயோகிக்கிறார்கள் என்ற பட்டிமன்ற போட்டியே நடைபெறும் அந்தளவிற்கு போதைப்பொருள்கள் ஒரு அத்தியாவசிய பொருட்களாக போய்விட்டது
கல்லூரிகளில். பான் பராக், பான் மசாலா, பான், கஞ்சா, அபின், ஹாஸிஸ், பெத்தடின் இன்னும் பெயர் சொல்ல முடியாதவைகளும் தற்போது சந்தைகளில் வந்து விட்டது. இந்தியாவின், வட மாநிலங்களில் உள்ள இளைஞர்கள் முதல் முதியோர்கள் வரை அதிகமாக பான் பராக் மற்றும் பான் உபயோகிப்பார்கள். அவர்களின் பற்கள் பார்ப்பதற்கு அசிங்கமாக கரை படிந்து இருக்கும். ஆனால் உள் காய கரைகள் இன்னும் இதற்கு மேலாக தான். தென்னிந்திய பகுதியான கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களில் சாராயம் மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் அடிக்கடி கடத்தி வரப்பட்டு பண்ட மாற்று வியாபாரம் நடை பெறுகிறது அந்த அந்த மாநிலங்களில் என்ற செய்தியினை நாம் ஊடகத்துறை மூலமாக அடிக்கடி படிக்கவும் செய்கிறோம் பார்க்கவும் செய்கிறோம்.
மேலை நாடுகளை பொறுத்த மட்டில் இவ்விதமான பழக்கங்கள் சிறு குழந்தைகளையும் விட்டு வைக்க வில்லை. ஆம்.. பல பெற்றோர்கள் தம்முடைய வீட்டையே ' குடி பார்' களாக ஆக்கி விட்டார்கள். பாட்டில் பாட்டிலாக அடிக்கி வைத்து இருப்பார்கள். கேட்டால் கலாச்சாரம், நாகரீகம் என்று சொல்வார்கள். சிறுப்பிள்ளைகளை அருகே வைத்துக்கொண்டே குடிப்பார்கள் பெற்றோர்கள். WHISKY மற்றும் WINE என்ற போதைப்பொருளினை மேலை நாட்டினர் அதிகமாக அடிக்கடி விரும்பி குடிப்பார்கள் எல்லா காலங்களிலும். அதனை பார்க்கும் பிள்ளைகள் பெற்றோர்கள் எப்போது வெளியே செல்வார்கள் என்று எதிர் பார்ப்பார்கள் அவர்கள் சென்றவுடன் அதனை எடுத்து குடிப்பார்கள். அப்பழக்கம் அவர்களை விட்டு போகாது. பிஞ்சிலேயே பழுத்து விடுவார்கள். 'குடி மக்களாக' மாறி விடுவார்கள் சிறு வயதிலேயே..!..?.
வளைகுடா நாடுகளில் புகைப்பிடிப்பவர்களின் மற்றும் போதைப்பொருட்களை பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து விட்டது. உலக சுகாதார நிறுவனமான (World Health Organisation) வளைகுடா நாடுகளில் சமீபத்தில் ஆய்வு ஒன்றினை மேற்கொண்டு சில புள்ளி விவரங்களை தந்து இருந்தது.
அந்த விவர அறிக்கையினை துபாயிலிருந்து வெளிவரும் ஆங்கில பத்திரிக்கையும் தன்னுடைய நாளிதழில் குறிப்பிட்டு இருந்தது. துபாயில், பல நாடுகளிலிருந்து பல வகையான போதைப்பொருட்கள் பல மாதிரியாக கடத்தி வரப்பட்டு சந்தையில் விற்கப்படுகிறது. அவற்றில் பாகிஸ்தான் நாட்டை சார்ந்த ஹாஸிஸ் என்ற போதைப்பொருளுக்கு இங்கு விலை மதிப்பு அதிகம். ஒரு கிலோவானது 45000 திர்ஹத்திற்கு விற்கப்படுகிறது. அதே ஐக்கிய அமீரகத்தின் தலைநகரான அபுதாபில் 5000 திர்ஹத்திற்கு விற்கப்படுகிறது.
வளை குடாவில் உள்ள மக்கள் தொகையில் 22 சதவீதமான நபர்கள் புகை பிடிக்கிறார்கள், 25 சதவீதமான மக்கள் போதைப்பொருட்கள் உபயோகிப்பதால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 15 மற்றும் 20 சதவீதமான மக்கள் அதனை உபயோகிப்பதால் இரத்த கொதிப்பு நோய் மற்றும் அது சம்மந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வளை குடாவில் உள்ள மக்களில் பாதி பேர்கள், புகைப்பிடிப்பதற்கு மட்டும் டாலர் மதிப்பின் படி 1.3 பில்லியன் (சவூதி அரேபிய ரியால் மதிப்பின் படி 5 பில்லியன்) பணத்தினை வீண் செலவு செய்து வீணடிக்கிறார்கள். ஒரு நபர் ஒரு வருடத்திற்கு சராசரியாக 2130 சிகரெட் பிடிக்கிறார்கள்.
மருத்துவர். அப்துல்லா அல் பாதாஹ் (Dr. Abdullah Al Badah, (Supervisor of the Anti – Smoking Programme at the Health Ministry) தன்னுடைய ஆய்வின் படி, தற்போது வளைகுடா நாட்டைச்சார்ந்த 600,000 பெண்கள் புகை பிடிக்கிறார்கள். இவற்றில் இளைஞிகள் தான் அதிகம் என்றும் அவர் குறிப்பிடுகிறார். அத்துடன் புகை பிடிக்கும் பழக்கம் உள்ள நாடுகள் வரிசையில் சவூதி அரேபியா 23 வது இடத்தில் உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
முஹம்மத் பின் மர்ஜீக் அல் ஹாரிதி (Muhammad bin Marzouk Al Harithy, Director of the Charitable Society to Increase Public Awarness against Smoking and Drugs in the Makkah Region) அவர்கள் குறிப்பிடுகையில், வளைகுடா நாடுகளில் குறிப்பாக சவூதி அரேபியாவில் வருடந்தோறும் 23,000 நபர்கள் புகைப்பிடித்தலால் ஏற்படும் நோயால் இறக்குகிறார்கள் என்று சொல்கிறார்.
இன்னுமொரு மருத்துவரான, அமீர் ராத்வி அவர்கள் (Dr. Amer Radwi, Consulatant oncologist at the Princess Noura Oncology Centre at the King Abdulaziz Medical City in Jeddah) மேலும் குறிப்பிடுகையில், இளைஞர்களையும், இளைஞிகளையும் நாள்தோறும் கெடுத்துக்கொண்டு இருக்கும் போதைப்பழக்கத்தினை ஒழிக்க நாடு முழுவதும் பிரச்சாரங்கள் அதிகளவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறுகிறார். அதாவது நம்முடைய போதைப்பழக்கத்திற்கு எதிரான பிரச்சாரமானது பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் இளைஞர்களை மையமாக வைத்து தான் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.
தற்போது வளைகுடா நாடுகளில் அதிகமான இடங்களில், சிஸா (Shisha – Hubbly bubbly - உக்கா) அதாவது கண்ணாடி குடுவைகளில் வைத்து புகை பிடிக்கும் பழக்கமானது அதிகமாக ஆகி விட்டது. அதனை ஒரு தடவை இழுத்தால் 10 சிகரெட்டினை ஒரே தடவை பிடித்தால் என்ன மாதிரியான உடல் உபாதைகள் வருமோ அதனை விட அதிகமான பாதிப்புகள் உள்ளன. இதனால் வாய் புற்று நோய்கள் வருவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கின்றன. இதனை பற்றி தெரிந்தும் போதை அதிகம் வேண்டும் என்பதற்காக இரவு வேளைகளில் அதிகமாக இங்குள்ளவர்கள் உபயோகப்படுத்துகிறார்கள். (நன்றி : Khaleej Times June 29.2007).
துபாய் அரசாங்கமானது சமீபத்தில், 18 வயதிற்கு குறைந்தவர்கள் கடைகளில் சிகரெட் வாங்கினால் அதனை அவர்களுக்கு விற்கக்கூடாது என்றும் அப்படி மீறி விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் சட்டம் பிறப்பித்துள்ளது. அத்துடன் பொது இடங்களில் புகை பிடித்தல் கூடாது என்றும் குறிப்பிடுள்ளது.
தற்போது புகை பிடித்தல் பழக்கத்தினை முழுமையாக இந்த மாகாணத்திங்களில் ஒழிக்க மற்றும் குறைக்க வேண்டி ஜித்தா மற்றும் ரியாத் போன்ற மாகாணங்களில் போதைப்பொருட்களுக்கு எதிரான தீவிர பிரச்சாரங்கள் முடக்கி விடப்பட்டுள்ளன என்று சவூதி அரேபியா அரசாங்கமானது கூறி உள்ளன.
இந்த நூற்றாண்டில், ஒரு பில்லியன் மக்கள் புகைப்பழக்கம் தொடர்பான நோய்களால் இறக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக Who’s (World Health organisation) மேலும் தன்னுடைய ஆய்வில் சொல்கிறது. வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ளவர்கள் இவற்றினை பற்றி சிந்தித்து செயல்பட்டு இப்பழக்கத்தினை இளைய சமூகத்தரிடமிருந்து கலைய ஆவல் கொள்ள வேண்டும். இல்லையென்றால் வரும் காலங்களில் போதைப்பொருள் பழக்கத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகவும் கூடும்.
போதைப்பொருள்களை உபயோகப்படுத்துவதால் மனக்கஷ்டம், மன வேதனை, மன நிம்மதியற்ற நிலை, யாரை கண்டாலும் கோபப்படக்கூடிய தன்மை, தலைவலி, உடல் சோர்வு, எரிச்சல், நரம்பு தளர்ச்சி, தூக்கமின்மை மற்றும் இது போல் பெயர் குறிப்பிடக்கூடிய நோய்கள் வர வாய்புண்டு. பெயர் குறிப்பிடாமல் உடல் உள் பல நோய்களும் வர வாய்ப்புண்டு. அத்துடன் இவர்கள் தற்கொலை போன்ற கொடிய செயல்களை செய்ய இதுவே காரணமாக அமைந்து விடுகிறது, என்பதனையும் இக்கட்டுரையின் மூலமாக தெரியப்படுத்துக்கொள்கிறேன்.
கேன்ஸர், ஹார்ட் அட்டாக், பல பேர்களுடன் பழக்கம் ஏற்படுவதால் எய்ட்ஸ் மற்றும் இதர பால் வினை நோய்களை போதைப்பொருட்கள் பழக்கம் உள்ளவர்கள் தானாகவே தேடிக்கொள்கிறார்கள்.
ஐநாவின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக்கழகத்தின் ஆய்வு அறிக்கையின் படி, உலகின் அதிகமான அளவில் AIDS / HIV நோய்கள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இந்திpயாவில் அதிகம் என்று குறிப்பிடுகிறது. தென் ஆப்பிரிக்காவில் 5.5 மில்லியன் மக்கள் இந்த வகையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்தியாவில் இதைவிட அதிகம் தான். 2006 ஆண்டின் கணக்கின் படி இந்தியாவில் 39.5 மில்லியன் மக்கள் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆனால் தற்போது மத்திய சுகாதார அமைச்சரான திரு. அன்பு மணி அவர்கள் இந்த கணக்கானது தவறு 36 மில்லியன் மக்கள் மட்டும் தான் மேற்குறிப்பிட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று பெருமையாக கூறி உள்ளார். இத்தகைய நோயானது வருவதற்கு அடிப்படையாக இருப்பது என்னவென்று பார்த்தால் போதைப்பொருட்கள் வருகைகள் அதிகம் என்று சொல்லலாம். இவைகளை ஒழிக்க பல கடுமையான சட்டங்களை ஒவ்வொரு நாடுகளும், அரசும் மற்றும் அரசாங்கமும் ஏற்றினாலும்.. போதைப்பொருள்கள் பழக்கம் மற்றும் புகைப்பிடித்தல் பழக்கம் உள்ளவர்கள் தானாக திருந்தினால் மாற்றம் நிச்சயமாக ஏற்படும்..இச்சமுதாயத்தில்..
'ஒரு நாளை நீங்கள் பயந்து கொள்ளுங்கள், (அந்நாளில்) எந்த ஓர் ஆத்மாவும் எந்த ஓர் ஆத்மாவிற்கு எவ்விதப்பலனுமளிக்காது, (பாவங்களுக்குப் பரிகாரமாக எந்த வித) நஷ்டஈட்டையும் அதனிடமிருந்து அங்கீகரிக்கப்படவுமாட்டாது, (யாருடைய) பரிந்துரையும் அதற்குப் பலனளிக்காது, அவர்களோ (எவராலும்) உதவி செய்யப் படவுமாட்டார்கள்.' சங்கைமிகு அல்குர்ஆன் - 2 : 123

No comments: